ஸ்ரீவித்யா நவாவர்ண பூஜை
- VISWESWARAN SODI
- Feb 24, 2018
- 3 min read
Updated: Jan 8, 2021
ஸ்ரீவித்யா நவாவர்ண பூஜை என்பது ஒரு மிகச் சிறந்த பூஜை. சாதகன், தகுந்த ஒரு குரு மூலம் ஸ்ரீவித்யா பல மந்திர உபதேசங்கள் பெற்று, அந்த மந்திரங்களை நன்றாக சாதகம் செய்யவேண்டும். அதன் பின்னர், அவரிடமிருந்து ஸ்ரீ பஞ்சதசாக்ஷரி / மஹா ஷோடசி மந்திரங்கள் உபதேசம் பெற்று, இந்த நவாவர்ண பூஜை செய்ய பீடாதிகாரம் பெற்றவர்களே இந்தப் பூஜையை செய்ய முடியும்.
இந்த பூஜையின் விசேஷம், பூஜை செய்பவர், தான் ஒரு ஜீவன் என்ற பாவமற்று தானே சிவம் என்ற பாவனையுடன் அம்பிகையை பூஜிப்பதேயாகும். தன் ஹ்ருதயத்தில் விளங்கும் அம்பிகையை பூஜை செய்யும் ஸ்ரீசக்ரத்திலேயோ அல்லது மேருவிலேயோ ஆவாஹனம் செய்து, விவரமான பூஜைகள் செய்து, பூஜையின் முடிவில் தேவியை மீண்டும் தன் ஹ்ருதயத்திலேயே அமரச் செய்கிறபடியால், சாதகன், தன்னைத்தானேப் பூஜை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இது ஒரு உயர்ந்த நிலை, அதுவே இந்த பூஜையின் விசேஷம்.
இனி இந்த பூஜையினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு.
ஸ்ரீ வித்யையில் குரு மிகப் ப்ரதானம். குரு பாதுகா மந்த்ரமும் அம்பிகையின் அங்க உபாங்கமாக ப்ரத்யங்க தேவதைகளும் இல்லாமல் ஸ்ரீவித்யையே இல்லை. எனவே யாகமண்டல ப்ரவேசம் செய்து, தத்வாசமனம்,குருபாதுகா மந்த்ர ப்ரயோகம், கண்டா பூஜை, பூஜா சங்கல்பம், ஆசன பூஜை செய்து அமர்ந்துவிட்டால், பின்னர் பூஜை முடியும்வரை அந்த ஆசனத்திவிட்டு சாதகன் நகரக்கூடாது. பின்னர் தேஹ ரக்ஷை, மேரு ப்ராணப்ரதிஷ்டை செய்யவேண்டும். அதன் பின்னர் பல விதமான ந்யாஸங்கள் செய்து, அம்பிகையை பூஜை செய்ய தகுதி உள்ளவராக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
பின்னர் பஞ்சபாத்ரம், சங்கு, விசேஷ அர்க்ய பாத்ரம் இவைகளை அதன் அதனிடத்தில் பூஜை செய்து வைத்து குருவைப் பூஜை செய்ய வேண்டும்.
பிறகு அம்பிகையை சாதகன் , தன் ஹ்ருதயத்திலிருந்து அம்பாளை ஸ்ரீசக்ரத்திலேயோ அல்லது மேருவிலேயோ ஆவாஹனம் செய்து, அம்பாளுக்கு சதுஷஷ்டியபசார பூஜை செய்ய வேண்டும். இதன் பின்னர் கணபதி, சூர்யன், மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகியோரை அவரவருக்கு உண்டான இடத்தில் தூப, தீப, நைவேத்ய, தாம்பூல மற்றும் கற்பூர நீராஜனத்துடன் பூஜை செய்யவேண்டும்.
திதி நித்யா பூஜை, மற்றும் குரு மண்டல பூஜை இதன் பின்னர் வருபவையாகும்.
ஒன்பது ஆவரண பூஜைகள் அதன் பின்னர் தொடரும். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் தூப, தீப, நைவேத்ய, தாம்பூல மற்றும் கற்பூர நீராஜனத்துடன் பூஜை செய்யவேண்டும்.
இதன்பின்னர் சில விசேஷ பூஜைகள் செய்ய வேண்டும்.
இந்த இடத்திலேயே அம்பிகையின் அங்க உபாங்கமாக ப்ரத்யங்க தேவதைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீ பாலாவும் அவர்களில் ஒருவர். அந்த சமயத்தில் ஸ்ரீ பாலா ஆவரணம் செய்யப்படும்.
ஸ்ரீ பாலா ஆவரண்த்தில், முதலில் ஸ்ரீ பாலா மூல மந்திர ஜபம், ஸ்ரீ கணபதி மூல மந்திர ஜபம் செய்து, ஸ்ரீ பாலாவை சாதகன் , தன் ஹ்ருதயத்திலிருந்து அம்பாளை ஸ்ரீசக்ரத்திலேயோ அல்லது மேருவிலேயோ ஆவாஹனம் செய்து, அம்பாளுக்கு உபசார பூஜைகள் செய்ய வேண்டும். ஸ்ரீ பாலாவுக்கு தூப, தீப, நைவேத்ய, தாம்பூல மற்றும் கற்பூர நீராஜனத்துடன் பூஜை செய்யவேண்டும். ஸ்ரீ பாலாவுக்கு 6 ஆவரண பூஜைகள் செய்யவேண்டும்.
பின்னர், ஸ்ரீ பாலா ஸஹஸ்ர நாமாவளி, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி, ஸ்ரீ லலிதா த்ரிசதி அர்ச்சனைகள் செய்து முடித்து தூப, தீப, நைவேத்ய, கற்பூர தாம்பூல, கற்பூர நீராஜனம் செய்யவேண்டும். பலி பூஜை, ஸ்தோத்ரம், கன்யா, சுவாசினி மற்றும் வடுக பூஜைகள் தொடர்ந்து செய்யவேண்டும்.
இதன் பின்னர் பூஜா சமர்ப்பணம் செய்து, மேருவிலிருந்து தேவியை மீண்டும் தன் ஹ்ருதயத்திலேயே அமரச் செய்து, பூஜையை சமர்ப்பணம் செய்து ஆசமனம் செய்து முடிக்க வேண்டும்.
இந்த பூஜை செய்வதின் பலன்கள் –
இப்பூஜை செய்பவருக்கும், அதை செய்விக்க ஏற்பாடு செய்பவருக்கும், மற்றும் அதைப் பார்ப்பதற்கும், அம்பிகையின் அருள் இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
இப்பூஜையை ஒரு முறை நடத்த ஏற்பாடு செய்பவர் வாழ்வில் எல்லா நலங்களும் அம்பிகையின் அருளும் பெற்று சீரும் சிறப்பாக வாழ்வர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
திருமணத் தடைகள் விலக, குழந்தைப் பேறு தடைகள் விலக
நல்ல வேலை கிடைக்க
நோய்கள் தீர, வாழ்வின் பலவிதமான தொல்லைகள் நீங்க
குழந்தைகள் நலம்,
குழந்தைகள் கல்வி வளம்,
பல்வேறு கலைகளில் சிறந்து விளங்க
குடும்ப நலம்
மேற்கூறிய எல்லாம் வேண்டியும் இந்த பூஜை செய்து வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக நிறைவேறும்.
நவாவரண பூஜை, பிரசாதம் மகிமை.
மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரியான ஸ்ரீமத் லலிதாம்பிகை மகாமேருவில் உறைபவள்.மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்!!!
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும்அன்னையின்அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரஸூந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங்களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்!!!
முதல் ஆவரணம் இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.
இரண்டாவது ஆவரணம் பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.
மூன்றாவது ஆவரணம் பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.
நான்காவது ஆவரணம் இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.
ஐந்தாவது ஆவரணம் பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.
ஆறாவது ஆவரணம் அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.
ஏழாவது ஆவரணம் புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.
எட்டாவது ஆவரணம்
மகா திரிபுரஸூந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.
ஒன்பதாவது ஆவரணம் பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. ஸ்ரீகாமேஸ்வரியாகிய லலிதா, காமேஸ்வரன் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்!! இந்த பூஜையை தரிசனம் செய்வதால் சகல தோஷம்நீங்கி, சகலமும் பாலாவின் அருளால் சித்திக்கும். இப்பூஜை நிறைவில் அர்க்கிய பிரசாதம் பெறுவது பெரும் புண்ணியம். இப்பூஜை நமது சட்டமங்கலம் (மறைமலை நகர்) ஸ்ரீ பாலாத்ரிபுரஸூந்தரி ஆலயத்தில் ஒவ்வொரு பெளர்ணமி மாலை நடைபெறும் தரிசித்து ஆனந்தம் அடைவோம், அருள் பெறுவோம்.
ஸ்ரீ பாலாத்ரிபுரஸூந்தரியை நம:
Recent Posts
See Allமுன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான். அவன் தேவர்களுக்கு அளவற்ற தொல்லைகள் தந்து வந்தான். தேவர்கள் அனைவரும்...